Monday, July 20, 2009

பிரிவின் வலி-- தனிமையின் மீளாத் துயர்




பொலிவிழந்த
வீட்டின் வண்ணங்கள்
உதிர்ந்த சுவர் போல
உலர்ந்து போகிறது வாழ்க்கை
நீயற்ற நேரங்களில்...

நீ இல்லாத இரவின் நிசப்தங்கள்
எவ்வளவு கொடுமை என்று உனக்குத் தெரிய வாய்ப்பில்லை...

விளக்கை அணைத்தபடி என்
வீட்டு கடிகாரத்தின் வினாடி முள்ளின் சப்தத்தில்
எளிதாய் கடந்து செல்லும் காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

கடைசியாய் உன்னுடன் உறவாடிய
என் வார்த்தைகள் எனக்குள்
தானே ஒலித்துச் செல்கின்றன ஓயாமல்...

இன்னும் நீளுமா தெரியவில்லை
இந்த இரவு, ஆனால் என் உயிர் வாட்டும்
உன் பிரிவின் துயர் மட்டும் குறைய வாய்ப்பில்லை...

என் தனிமையின் கொடுமையை உனக்கு
எடுத்துரைக்க சந்தர்ப்பங்கள் அநேகமாய்
அண்மைக் காலத்தில் எதுவும் இல்லை.

இனிமேல் என்னுடன் பேச எதுவும் இல்லையென்று
சொல்லி விட்டாய்.
உன்னைப் பார்த்ததும்
உன் காலடியில் விழுந்து நொறுங்கக்
காத்திருக்கின்றன என்னுடைய சில மௌனங்கள்...

மழை விட்டிருந்த ஒரு மாலைப் பொழுதில்,
எப்போதும் போலவே இப்போதும் உன்னை
நினைத்துக் கொண்டே என் வீட்டு மொட்டை மாடியில்
நடந்து கழிக்கும் ஒரு பொழுதில், எங்கோ,
எப்படியோ உதிர்ந்து காற்றில் திக்கற்றுத்
திரியும் பெயர் தெரியாத ஒரு பறவையின் சிறகு என்னிடம்
உரைத்துச் செல்கின்றது, தனிமையின் மீளாத் துயரை...

Thursday, July 16, 2009

நானும் என் தனிமையும்..........


என்னோடு நீ நடந்த வீதிகளில்
இப்போதும் நடக்கிறோம்
நானும் என் தனிமையும்

யாரும் பார்க்காத
கணப் பொழுதுகளில்
குனிந்துப் பொறுக்குகிறேன்
எப்போதோ எனக்காக
அந்த வீதியில் நீ வீசிச் சென்ற
காதல் பார்வைகளை...

வீதியின் ஓரங்களில்
பூத்திருக்கும் போகன்வில்லாப் பூக்களில்
நீ மிச்சம் வைத்துப் போனப்
புன்னகைகளைப் பத்திரமாய் சேமிக்கிறேன்..

உனக்குப் பிடித்த
அந்த மரத்தடி இருக்கையில்
ஓரிரு நிமிடங்கள் சாய்கிறேன்..
உன் நெருக்கத்தின்
புழுக்கத்தை
உள்ளுக்குள் தேக்கியபடி..

என் தோளில்
உன் முகமும்
உன் மடியில்
என் தலையும்..
அந்த நிமிடங்களை
மறுபடியும் வாழ முயற்சித்து
முடியாமல் எழுந்து நடக்கிறேன்..

முகத்தில் மோதும் காற்றில்
முன்னர் நீ சொன்ன
சின்ன சின்ன ரகசியங்கள்
கலந்து இருப்பதில்
கண்கள் தானாய் ஈரமாகின்றன...

அந்த மரத்தின் பின்னால்
என் முதல் முத்தத்திற்கு
வெட்கமாய் நீ சொன்ன ச்சீ
வண்டுகளின் மொழியில்
இன்னும் மறுஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அந்த மரத்தின்
இலைகள் இன்னும்
சிவந்துப் போகின்றன..
அதன் அடியில்
உன் நினைவுகளோடு
நான் ஒதுங்கி நிற்கும் பொழுதுகளில்..

சாலையின் பெயர் பலகையில்
மங்கிய நிலையில.....நான்