Friday, January 30, 2009
மழைக் கால ஒரு மாலையில்..
ஒரு பெருமழையொன்றைப் பொழித்து
மிதமிஞ்சிப் போன ஈரங்களை
தூறல்களாய் சொட்டிட்டுக் கொண்டிருந்த
மேகங்கள் ஒளியத் தொடங்கும்
மஞ்சமிக்கும் மாலைப் பொழுதுகளில்
கதவு தட்டுகிறாய்
வீசிப் போன புயலும்
வெளி நனைத்துச் சென்ற மழையும்
முயன்றுத் தோற்றுக் களைத்த
உடலுதறச் செய்யும் ஜில்லிடுதல்களை
உன்னில் சொட்டிடும் துளிகளில்
பெற்றுத் தந்தாய்
சிறு கதையொன்றைச் சிலாகித்து
விரல் பற்றிச் சொடக்கிட்டு
சட்டையில் மறந்த பொத்தானிட்டு
சகலமும் நான் உனக்கென்று
சளைக்கச் சொல்லுகிறாய்
தொண தொணவெனாமலும்
நீண்டதொரு முற்றுமிடாமலும்
ஒவ்வொரு தலைப்புகளில்
ஒவ்வொரு மௌனமிட்டு
சேகரித்து உதிர்க்கிறாய்
நுனி நாக்கு வார்த்தைகளை
வெது வெதுப்பான குளிரின்
மெல்லிய புணர் பொழுதுகளில்
இளஞ் சூட்டுத் தேநீர் சுவையை
மெல்ல உடலில் பாய்ச்சுகிறாய்
என் உள்ளங்கை மீதான
உன் உள்ளங்கை ஸ்பரிசத்தில்
விசாலப்பட்ட மெத்தையிருந்தும்
அகலப்பட்ட போர்வை கிடந்தும்
மெத்தென்ற என் உடலில்
உன்னுடல் வளைத்த என் கரங்களில்
தூங்கிப் போதல் சுகமென்றும்
செத்துப் போதல் மா சுகமென்றும்
சிந்தையுறச் சொல்லுகிறாய்
என் தலை மயிர்க் கோரி
என் காய்ந்த உதட்டிதழ்களில்
உன் எச்சிலீரமிட்டு
சொல்லண்ணா போதையில் கிடத்தி
ஓடி ஒளியும் மாலை மேகங்களோடு
மறைந்து போகிறாய்
அதிகாலைத் தெருக்களில்
இரவு மழையின் மிச்சங்களாய்
இன்னும் காயாமல் கசிகின்றன
உன் இரவு நியாபகங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
படித்து முடிக்கும்போது பெருமழையில்... இல்லை இல்லை
கவிதை கடலில் கரைந்துபோனேன். மிக அருமையான முத்து வரிகள்,
தொடர்ந்து செதுக்குங்கள் - உங்கள் கவியோவியம் காண காத்துகிடக்கின்றோம்.
வழக்கம்போல கலக்கலான கவிதை வரிகள்...
Thanks dude sorry for the long break
Post a Comment