Wednesday, October 28, 2009

முத்தம் தொலைத்த இரவு...


இரவின் இருளில்...
இலக்கின்றி நடந்துக் கொண்டிருந்தேன்.

யாருமற்ற சாலையின்..
வளைந்த பாதையில்..
அவள் நின்று கொண்டிருந்தாள்.

மெல்லிய போர்வையொன்றை..
போர்த்தியபடி..
அவளை இதற்க்கு முன்..
எங்கும் பார்த்ததில்லை.

கடந்து போகையில்..
மெல்லிய புன்னகையோடு..
உடன் நடக்கலாமா என்றாள்.
பதிலேதும் எதிர்பாராமல்...
என்னோடு நடக்க தொடங்கினாள்.

என் கவிதைகளை..
அவளுக்கு தெரியுமென்று...
என் கண்களை பார்த்தாள்.

எங்கு படித்தாய் என்ற
என் கேள்விக்கு
புன்னகையை பதிலளித்தாள்.

மெல்லிய சோகம் படர்ந்த...
என்னுடைய கவிதைகளை
பிடிக்குமென்றாள்.

பிடிக்காத கவிதையென்றும்...
சில தலைப்பை..
பட்டியலிட்டாள்.

மிக தெளிவாய்..
என் கவிதை வரிகளை..
பிழையின்றி வாசித்தாள்.
கேட்டபடியே நடந்திருந்தேன்.

அந்த பனியிரவின் பாதையில்...
வெகுதூரம் கடந்திருந்தோம்.

சில நொடி மௌனம் உடைத்து..
கவிதை ஒன்று
சொல்ல சொன்னாள்...

"எதைப் பற்றி சொல்வது..?"
"இந்த பனி இரவும்..
உடன் வரும் நானும்...
போதவில்லையா உன் கவிதைக்கு.."
கோபமா வருத்தமா தெரியவில்லை...

ஏதோ சொல்ல தொடங்கி...
கவிதையாய் சொல்லி முடித்தேன்.

இரவு...
தொலைய துவங்கியிருந்தது..

"இந்த கவிதைக்கு தலைப்பாய்..
என் பெயர் வைப்பாயா..?"...

ஏனென்றே புரியாமல்..
நானும் தலையசைத்தேன்..

அழுத்தமாய் முத்தமிட்டு..
காதோரம் பெயர் சொன்னாள்..
விடியலின் நிழல் வரும் முன்...
வேகமாய் மறைந்தே போனாள்.

கனவு போலிருந்தாலும்...
கவிதை நினைவிருந்தது.
எழுதி முடித்த போது..
அவள் பெயர்..
மறந்து போயிருந்தது...

No comments: