Friday, November 6, 2009
நீ இல்லாத இரவுகள்........
வெறுமையாகவே விடிகிறது
நீ இல்லாத இரவுகள்........
கனவில் பேசிய வார்த்தைகள் கூட
காலையில் மறந்து போகிறது
மனப்பாட பகுதிகளைப்போல ...
நீ கொடுத்த முத்தங்கள்........
அலைபேசியின் எந்த பகுதியில்
ஒளிந்து கிடக்கிறதோ இப்போது .......
மவுனத்தின் நிசப்தங்களில்
எதிரொளித்துக்கொண்டே இருக்கிறது
நீ பேசிய வார்த்தைகள் ....
எங்கிருந்தாலும் என்னை
நெட்டித்தள்ளி
இழுத்துக்கொண்டு போகிறது
உன் நினைவுகள் ....
உன்னைப்பற்றி எழுதும்போதெல்லாம்
இளமையை கொட்டுகிறது
என் பேனா.......
வீதியில் போகும் பலூன்காரனை
வேடிக்கை பார்க்கும் குழந்தையைப்போல்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னைக்கடந்து போகும்
காதல் ஜோடிகளை ........
கடை வாசலில் தொங்கும்
உடையை உனக்கு போட்டு
அழகு பார்க்கிறேன்
கற்பனையில்....
எங்கோ கேட்கும் ரயிலின் சத்தம்
நினைவுபடுத்துகிறது
நீ வழியனுப்பி வைத்த நிமிடங்களை ...
வானம் பார்த்து படுத்திருக்கும்
மொட்டைமாடி இரவுகளில்
நிலவு நினைவுபடுத்துகிறது
ஒப்பனையற்ற உன் முகத்தை ....
ஒட்டைக்குடிசையில் ஒழுகும்
மழைத்துளிகளைப்போல்
உள்ளுக்குள் சில்லிடுகிறது
சில நிமிடங்கள் .........
உன்னால் அனுபவிக்கும்
தனிமையின் வலியை
உனக்கும் தர மனமில்லை
அதனால் அனுப்புகிறேன்
உனக்கு துணையாய்
என் கவிதைகளை.........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment