Monday, September 21, 2009

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்


ஆம்!
அரைமணிநேர -
மின்சார அணைப்பில் தான்-
சுடர் விட்டு எரிந்தது
நம் காதல்;

"இருட்டில் என்ன
செய்கிறாய் - போ.. போயி
ஒரு மெழுகுவர்த்தி
வாங்கி வா" என்றாள் அம்மா.

மெழுகுவர்த்தி
வாங்க வந்த கடையில்
நீ -
மெழுகுவர்த்தி கொடுக்க

மனசெல்லாம் மின்சாரமும்
பாய்ந்தது;

சிரித்த உன் முகத்தையும்
நானுன்னை -
ஏனோ அப்படி பார்த்ததையும்
நீயும் ரசித்து விட -

தெருவெல்லாம் அசைபோட்ட
உன் நினைவில் -
மெல்ல வந்தது
காதல் ஆசை!

மறுநாள் விளக்கணைந்த போது
அம்மா சொல்லவில்லை -
நானாகவே கடைக்கு வந்தேன்,

நீ சிரித்தாய்..

"ஒரு மெழுகுவர்த்தி கொடு
என்றேன்;

கொடுத்தாய்..,

எனக்கு போக
மனம் வரவில்லைதான்-

"ஏன் வேறேதாவது வேண்டுமா
என்றாய்.,

"ஆம்., உன் மனது
வேண்டும்;
(மனதில் நினைத்துக் கொண்டேன்)

"என்ன?

உன் மனது
வேண்டும்;ஒருமுறை என்னை காதலிப்பாயா?

"என்ன வேணும்
ஏனப்படி பார்க்கிறாய்
என்றாய்.,

"இவ்வளவு அழகாய்
இருக்கிறாயே,
பார்க்காமல் என்ன செய்ய..

"அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்.,

உன் இதயம் வேணும்
ஒரேஒரு முறை
கொடேன்;

"என்ன தம்பிக்கு
என்ன வேணுமாம்;(அப்பா கேட்டார்)

"மெழுகுவர்த்திப்பா;
மெழுகுவர்த்தி வேணுமாம்..!!

"ஆமா.. அண்னாச்சி
மெழுகுவர்த்தி தான்
வேணும்.,

உன் மகளின் மனசென்று சொல்ல
தைரியம் -
வரவில்லை; எனக்கு.

வெறும் காதல் வந்தவனாய்
அவளை திரும்பி திரும்பி
பார்த்துக் கொண்டே வந்தேன்.,

'அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்' என்றாளே
அப்பா வரார் சொல்லு என்றாளே..

மனசு இரவெல்லாம் -
விளக்கனையுமா..
மீண்டும் மின்சாரம் போகுமா.. என
யாருக்கும் தெரியாமல்
பற்றிக்கொண்டு எரிந்தது;

மறுநாள் காலை எழுந்ததும்
"அம்மா கடைக்கு போகனுமா?

"ஏண்டா கேட்குற
அதலாம் வேணாம் -
நீ போ;போயி..படி

"போடி மோசக்காரி -
உனக்கென்ன தெரியும் என் காதல் பற்றி..

அம்மாவை திட்டுவிட்டு
உன் வீட்டு தெருவெல்லாம்
வந்து என் காதல் பூ
தூவினேன்;

உன் அப்பா என்னை
முறைத்த பார்வையை கூட
என் காதல் பக்கத்தில் -
வெற்றிக்கான குறிப்புகளென
எழுதிக் கொண்டேன்;

போகும் போதும்
வரும்போதும் -
நீ என்னை பார்க்கிறாய் என்று தெரிந்த
உன் ஒரு -பார்வைக்காய்
என் நாட்களை எல்லாம் உன்
கடை வாசலில் குவித்து
காதலி காதலி என்று கெஞ்சினேன்;

உனக்குத்தான் அதெல்லாம் புரியாமல்
சில்லரைகளோடு என் இதயத்தையும்
வாங்கி - உன்
கல்லாபெட்டியில் -
போட்டுக்கொண்டாய்;

'மோசக்காரி..
மோசக்காரி..,
திட்டிக் கொண்டே வீட்டிற்கு
வந்தேன்;

மின்சாரம் நிற்க,
விளக்கு அணைய..,
உள்ளே -
காதல் பூக்கள் பூக்கத் துவங்கின;

அம்மா நான் மெழுகுவர்த்தி வாங்கியாறேன்..

ஓடி வந்த ஓட்டத்தில்
மூச்சிரைக்க -
உன் கடை முன் வந்து நின்று
இருட்டிற்குள் எரியும் உன்
முக வெளிச்சத்தில்
அசந்து நிற்க-

"என்ன வேண்டும்?

"ஒரு மெழுகுவர்த்தி!

கொடுத்து விட்டு நீ-
அப்-புரம் திரும்பிக் கொண்டாய்;

என்னால் அங்கிருந்து நகர
முடியவில்லை,

அதற்குள் நீ-

"என்னவேண்டும்?

"மெழுகு வர்த்தி!

நீ-
மீண்டும் கொடுத்துவிட்டு என்னை பார்த்தாய்..
நான் அங்கிருந்து நகரவே இல்லை..

மீண்டும் நீ-
"என்ன வேண்டும் என்றாய் -
ஒன்றுமே தெரியாததை போல;

"இன்னொரு மெழுகுவர்த்திக் கொடு!

"அதான் இத்தனை வாங்கி
விட்டாயே இன்னுமெதற்கு
மெழுகுவர்த்தி???

"அப்போ உன் -
காதல் கொடு!!

"என்ன????

"உன் காதல் வேணும்-
என்னை காதலியேன்' என்றேன்.

"அப்பா..
அப்பா..
நீ கத்த, அப்பா ஓடிவர..

என்னவென்று விவரமறிந்து
என்னை-
தரதரவென்று என் வீடுவரை
இழுத்துவந்து அடித்து -
வீட்டின் வாசலில்
வீசிவிட்டு -

தெருவெல்லாம் என்னை
திட்டித் தீர்க்க குத்தகை
எடுத்தவரை போல
கத்திக் கொண்டே போக;

அவுமானத்தால் அம்மா கதறியழுது
என்னை வெளியே போடாவென
விரட்டியதில் -

நான் -
வெளியே வந்து நின்று
உன் கடை இருக்கும் தெருவை
பார்க்கிறேன்....,

நீ அங்கே எங்கோ
தொலைதூரம் நின்று

வருத்தத்துடன் என்னை பார்க்கிறாய்;

என் கண்கள் சற்று
கலங்கியது தான்,

கலகங்கட்டும்;

அதோ..
என் கண்ணீர் வழியே -
தரை தொட்ட என் காதல்
வருத்தங்களாய் -
உனக்குள்ளும் பூக்கிறது பார்!!

No comments: