Monday, September 21, 2009

ஒரு காதல் கவிதை


"காதலின் கால நகர்தல்"

ஒரு சின்ன புள்ளியாய்
உன் -
கருவிழியிலிருந்து
நினைவுருகிறது நம் காதல்!

உனக்குள் நானாகக்
கரைந்த - அந்த நாட்கள்
இன்னும் வலிப்பதாகவே கடக்கின்றன;

தெருக்களின் நீளத்திலெல்லாம் - என்
ஆயுளை - உன் - வருகைக்காய்
பதித்து வைத்திருந்த காலமது;

உடல் உரசா தூரத்தில் - இதயங்கள்
இரண்டும் ஒன்றென சங்கமித்திருந்த
அந்த வேளையில் தான் -

நேரம் காலம் நட்சத்திரம் - பார்த்தடிக்கப்
பட்ட உன்-
திருமண அழைப்பிதழில் -
முதல் முதலாய் நம் பிரிவும்
நிரந்தரமாய் அறிவிக்கப் பட்டன;

எப்படியோ சேர்ந்தே விடுவோமென்றிருந்த
மிச்சம் மீதி நம்பிக்கையும் -
யாரோ உனக்குப் போட்ட
மூன்று முடுச்சுகளில் அவிழ்ந்து போனது;

உண்மையில் -
உனக்கு எத்தனை வலித்ததோ -
தெரியவில்லை, எனக்கு இன்றுவரை
வலியாகவே 'மறக்க மறுக்கிறது - நம்
காதல்!

இதோ அம்மாவாகியும் விட்டாயாம்;
நீ -
அம்மாவாகிவிட்ட வெற்றியில் தோற்ற - நம்
இதயத் தெருக்களில் - இனி எந்த ஜென்மம் வந்து
சிரிப்புக் கோலமிடுமோ; இட்டுபோகட்டும்,

இப்பொழுதும்;
உன் குழந்தையின் சப்தத்திற்கு இடையேயும்
உன் கணவனின் அரவணைப்பிற்கு பிறகுமாவது -
ஏதோ ஒரு சின்ன சிலிர்ப்பை -
எனக்காக உன் இதையம் உணராமலா இருக்கும்???

உனக்கெப்படியோ;
நாட்கள் கடக்கும் விளிம்புகளில்..
உன் சிரிப்பும் நினைவுகளுமாகவே
என் வாழ்நாட்கள் உதிர்கின்றன;

உனக்காக காத்திருந்த காத்திருப்புகளிலும்
அழுத கண்ணீரிலும் - காதலை கற்றளவு
உன்னை நானும் -
என்னை நீயும் -
கற்றுக் கொள்ளவில்லை என்பதே நிஜம்!

என் நெஞ்சில் பச்சை குத்திய - உன்
பெயரிலிருந்து -
விழித்தே கழித்த என் இரவுகள் வரை
ஒன்றாக உனக்குத் தெரிந்திருக்குமா???

இரவின் நெடுநேரம் வரை
உன் வீட்டு வாசலில்-
நான் நின்றிருந்ததும்..,

நான் நிற்ப்பேனென நீ - உன் படுக்கையில்
அழுதுத் தீர்த்தும்..,

மறுநாள் காலை -
விடியலில் எழுந்து நீ
வாசல் தெளித்தும்..,

உன் வாசலின் ஈரமாய் - என்
இதயம் கனத்ததுமாகவே........
நகர்கிறதென் காலம்!!

No comments: